Pages

Monday 13 April 2020

கோடையின் முதல் மழை -2

6th Apr 2020


கண்ணுக்கு தெரியாத கிருமி
கையாலாகாத மனிதன்
வீட்டிலேயே இருக்க சொல்லும் அரசு
எத்தனை நாள் இந்த சிறைவாசம்? எவருக்குத் தான் தெரியும்?

வீட்டு  வேலை; அலுவலக  வேலை
தனிமை சிறையும், தகுந்த தண்டனையும் ......

நாள் கிழமை மறந்து நான் அழிய துவங்கும் நேரம்
மாற்றம் வேண்டி நேற்று கண்ட திரைப்படம்
நெஞ்சில் நிழலாடுகிறது ...

முன் பின் பார்த்திராத, திடீரென்ற சந்திப்பில்
இணையும் அந்த இளம் ஜோடிகள்
வியன்னா தெருக்களில் அந்த ஓர் இரவில் சுற்றி வர
போலிகளற்ற, இனிமையான தருணங்கள் .....***

திடீரென சட சடவென சத்தம் .....

எழுந்து வந்து பால்கனியிலிருந்து பார்க்கிறேன்

மண்ணின் மணம் நாசியை நிரப்ப
மெலிதான இடியோடு, சரசரவென

அந்த ஜோடி ஒருவருக்கொருவர்  கொடுத்த
"ஓராண்டுக்கு பின் சந்திப்போம்" என்ற வாக்குறுதியினை
நினைவூட்டி நிதானமாக பெய்ய ஆரம்பிக்கிறது
இந்த கோடையின் முதல் மழை

நினைவுகளும், நீலவானமும் இங்கே, நீ எங்கே?

*** Film:  Before Sunrise by Richard Linklater

அருகே, தொலைவில்

Feb 2014

ஜன்னலோரப் பயணம் ஒரு தனி சுகம்....

எதிர்ப் புறம் விரையும் மரங்களும், பன்னீர்த் துளியாய் மழையும்,

காதில் வழியும் இசையும்.....

எதிரே அவள் வந்து அமரும் வரை......

இதுவரை அவளைக் கண்டதில்லை, அவளால் எந்த பாதிப்புமில்லை.

ஆனால் அவளைக் கண்டதும், உள்ளுக்குளே ஓர்

உடைப்பெடுத்த ஏரியாய் உன் நினைவுகள்...

என்னுடனே நீ இருக்கிறாய், ஆனால்

ஏன் எங்கோ தொலைந்து விட்டாய்?

கண்களில் அந்தக் காயமும், கண்ணீரும் .....

என் கண்ணை விட்டு அகலாது.

உன் அணைப்போ, முத்தங்களோ எனக்கு வேண்டாம்.

ஆனால் நானறிந்த நீ, இல்லை இல்லை

என்னையறிந்த நீ

எதிரிலிருந்தும் எங்கோ ஏன் தொலைந்தாய்?

பொய்யா, பழங்கதையா?

Jan 1993


நண்பனின் அழைப்பினால்,
நானும் கலந்து கொண்டேன் அன்றிரவு விருந்தில்!
கேலிப்பேச்சும், கும்மாளமுமாய் பொழுது கழிந்தது.

ஆனால்,

அது ஒரு பிரிவுபசார விருந்து.
எனக்கு அந்த குண்டு நண்பனை மிகவும் பிடிக்கும்.
அவனுக்கும் என்னை!
ஏதோ ஒரு மெல்லிய சோகம் என்னுள் எங்கோ
இடறிக்கொண்டிருந்தது!

விருந்துப் பேச்சின் திசையில் என்னை இருத்திக் கொள்ள
சற்றே பாடு பட வேண்டியிருந்தது.
திடீரென யாரோ உன் பெயர் சொல்ல
என்னுள் தீக்கங்காய் ஒரு கணம் உன் நினைவு!
மீண்டு வந்த நான் கவனித்தபோது
நீ இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றினை
யாரோ சொல்லிகொண்டிருக்க.....

எங்கெங்கோ பிறந்து வளர்ந்து
வேறு வேறு உலகத்தைச் சேர்ந்த நாங்கள்
அந்தக் கணம் அங்கு ஒன்றாக உட்கார்ந்து
ஒரே விஷயத்துக்கு சிரிப்பது சற்றே அபத்தமாய் இருந்தது.
இதற்கிடையில் கண்காட்சியில் தொலைந்த பையன் போல்
என் நினைவுகள்.

சுண்டி விடப்பட்ட நாணயம் போல்
சுழன்று சுழன்று மேலேறி கீழ் விழும்
பூவாகவும் தலையாகவும் உன் நினைவு.

அந்த குண்டு நண்பனை நான் மிகவும் விரும்புவதை
எப்படிச் சொல்லட்டும்?
அவன் கன்னத்தில் முத்தம் ஒன்று தரட்டுமா?
கும்பலோடு சேர்ந்து நானும் சிரிக்க முயல்கையில்
சட்டைப்பையில்சில்லறையோடு, என் நெஞ்சும்
சற்று சோகத்தில் குலுங்குவதேன்?

மாய மான்

Dec 1985

கண்ணை மூடிக்கொண்டு காட்டுப் பாதையில் ஓர் ஓட்டம்!
மூடிய கண்ணுக்குள் வழி நடத்தும் மாய மான் ...

ஆசையா, ஆக்ஞையா?
ஏன் இந்த மானைப் பின் தொடர்கிறேன்?
காட்டுப் பாதையென உணர்ந்தது எங்கனம்?
அஞ்ஞானக் காடா, ஆன்மிகச் சேறா?
எங்கு நான் என்னை இழப்பேன்?
எங்கும் நிறைவேன்?

எதுவாய் இருப்பினும், வனத்தின் சுகங்களை
காட்டிக் கொடுத்த மாய மானே,
வந்தனம் உனக்கு!

ஆனால்,

என் கைப்புச் சுவையை எனக்கே ஏன் உணர்த்தினாய்?
எந்தக் கடவுளை வேண்டி இந்தத் தவம்?
அறிவை நெருப்பாக்கி
உடலை ஆகுதியிட்டு
என்னை அழித்து இயற்றும் இவ்வாழ்க்கைத்
தவத்தினை முடித்து வைத்து,
வரமருளும் தேவன் எவன்?
எவருக்கு அவ்வரங்கள் ஈவான், என் வாழ்க்கை முடிந்த பின்னே.

வினாச் சீதைகளுக்கு விடை நீ தான் மாய மானே!

எனினும்,

மானைத் தொடர்வதே
மனதுக்கு சுகம் தரும்!
எனவே,
அருகே சென்றாலும்
அதனை தொட மாட்டேன்....
எட்டிச் செல்ல விட்டு இன்னும் தொடர்வேன்!! 

கோடையின் முதல் மழை


11-04-2015

ஓரிரு மழைத்துளிகள் கண்ணாடியில் விழுகின்றன.
காரின் ஜன்னல் திறந்திருக்க நாசியில் நுழையும் மண் மணம்.
நீ ஏன் இடை விடாமல் பேசுகிறாய்?
நீ அவளில்லை என்று எனக்கு புரிய வைக்க முயற்சியா?
நீ அறிவாய்,, நான் அறிவேன்.. பின் ஏன் பாசாங்குகள்?   


நீளும் சாலை இருளும் ஒளியுமாய்.!
நகரும், நிற்கும் வாகனங்கள்: மெதுவான போக்குவரத்து.
பிடிக்கிறதோ இல்லையோ பயணம் தொடர்கிறது
மண் மணமும் மழைத்துளியும் தான் அவ்வப்போது சுகந்தங்கள்.
கோடையும், மாரியும் சென்றதும, வசந்தம் மீண்டும் வருவது
பருவ காலங்களுக்கு மட்டும் தானா?
நாம் அணைத்து ரசித்து மகிழ்ந்த காலங்கள் கனவோ?


நீ அவளே தான்! உன் கண்கள், உன் மனது உனக்கே
அந்த உண்மையை சொல்லிக் கொண்டிருப்பது
உனக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்...
பின் ஏன் நான் அவளில்லை என்று உன்னை நீயே
ஏமாற்ற நினைக்கிறாய்?


வாழ்வின் இருப்புகள் தரும் அழுத்தங்கள் எனக்கும் தெரியும்.
ஆனாலும்,
ஏங்கும் உன் இதயமும், துடிக்கும் என் கரங்களும் இருவரும் அறிவோம்.
தழுவிட தயங்கும் இக்கணம்,
அதோ வீசும் காற்றின் இலையாய் எங்கோ பறந்திடுதே!


பொய்ச் சுவர்களை உடை!


என் வேட்கையும், காதலும், மௌனமும் புரிந்தது போல்
மெலிதான மழை!


தயங்கும் வார்த்தைகளால், மெல்லிய குரலில் நான் பேசத் துவங்க,
நினைவின் வலியை மறக்க, வார்த்தைகளால் நீ மறுக்க
அந்த நாட்களில், பழகிய அந்த அழகிய சாலையில் நான் திரும்ப
,அதிர்ச்சியும், ஆர்வமும், தவிப்பும், மறுப்பும் ஒரு சேர.....................

மீண்டும் நான் நெடுஞ்சாலையில்.............................

நான் ஒன்றும் சொல்லவில்லையே என்ற உன் சன்னமான குரல்
ஏக்கத்துடன் ஒலிக்க......

அந்த சிக்னலில் உன்னை இறக்கி விடுமுன்,
உன் உதட்டில் நான் தந்த முத்தம்...........
சரியென தீர்ப்பளித்து, நன்றாக பெய்ய ஆரம்பித்திருந்தது
இந்த கோடையின் முதல் மழை!